< Back
மாநில செய்திகள்
பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
விருதுநகர்
மாநில செய்திகள்

பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

தினத்தந்தி
|
30 April 2023 8:15 PM GMT

பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெருநகரங்களில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல் முறையாக நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு 10 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நகராட்சிகளில் விருதுநகரும் ஒன்றாகும்.

பொதுமக்கள் பங்களிப்பு

இதனைத்தொடர்ந்து தற்போது ராஜபாளையம், சாத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த திட்டப்பணிகள் எதுவும் இன்னும் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வராத நிலையே நீடிக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி பொதுமக்கள் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன் பணி தொடங்கி 3 ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திட்டப்பணி குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான நிதி மேலாண்மையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த செயல்பாடு

குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வரைபடம் தயாரித்த போதிலும் இதில் இளங்கோவன் தெரு, மேற்கு பாண்டியன் காலனி உள்ளிட்ட பல பகுதிகள் விடுபட்டுவிட்டன. இருந்த போதிலும் விடுபட்ட பகுதிகளுக்கு 2-ம் கட்டமாக திட்டப்பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பணி நகரில் 2 பகுதிகளாக பிரித்து மேற்கு பகுதியில் ஒரு ஒப்பந்தக்காரரிடமும், கிழக்கு பகுதி மற்றொரு ஒப்பந்தகாரரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இதில் மேற்கு பகுதியில் பணி மேற்கொண்ட ஒப்பந்தக்காரர் முறையாக செய்யாததால் அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த மாபா பாண்டியராஜன் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனாலும் பணி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாத காரணத்தால் நகரில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.

வீட்டு இணைப்புகள்

பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பகுதிகள் உடனடியாக மூடப்படாமல் வாகன போக்குவரத்திற்கும், பொது மக்கள் நடமாட்டத்திற்கும் பெரும் சிரமம் ஏற்படும் நிலை தொடர்ந்தது. விதிமுறைப்படி குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முழுமையாக முடித்து அதன் பின்பு தான் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் விதிமுறைகளுக்கு முரணாக நகராட்சி நிர்வாகமும் திட்ட பணி முழுமையாக முடிவடையாத நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி குழு இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. நகரில் வீட்டு இணைப்புகள் கொடுக்க வேண்டிய பணி மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. அதற்கு ரூ. 6 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு நகராட்சி நிர்வாகம் பணியை தொடங்கியது. ஆனால் இதற்கான டெண்டர் எடுத்த நிறுவனம் முறையாக பணியை மேற்கொள்ளவில்லை என்ற புகார் கூறப்பட்டதால் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றது. இதனால் இன்னும் முழுமையாக நகரில் வீட்டு இணைப்புகள் கொடுக்காத நிலை நீடிக்கிறது.

பொதுமக்கள் சிரமம்

தற்போதைய நிலையில் இன்னும் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரியாத நிலை உள்ளது. இதற்கிடையில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறும் நிலை அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை தொடர்கிறது.

இப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காணப்படாத நிலை உள்ளது. சில நேரங்களில் இதனால் குடிநீருடன் கழிவு நீர் கலக்கும்நிலை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் திட்டம் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வராத நிலையில் பிரச்சினைகள் மட்டும் தொடர்வதால் நகராட்சி நிர்வாகம் திட்டப்பணியை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால் இதுவரை திட்டப்பணி எப்போது முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்பது உறுதியாக தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உரிய ஆய்வு செய்து திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். பாதாள சாக்கடை பணிகள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பிரதான பகுதி

இல்லத்தரசி அலமு:-

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பாடில்லை. விருதுநகரில் பிரதான பகுதியான ெரயில்வே பீடர் ரோட்டில் இன்னும் வீட்டு இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் திட்டப்பணி நடைபெறும் போதே வீட்டு இணைப்புகள் கொடுத்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது.

தற்போது வீட்டு இணைப்புகள் கொடுக்க சாலையை தோண்டினால் சாலை சேதமடைந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு சாலையை சீரமைக்க மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மொத்தத்தில் யாருக்குமே திட்டம் முழுமையாக எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியாத நிலையே உள்ளது. இதற்கு யார் தீர்வு காண்பார்கள் என்பதும் நகர் மக்களுக்கு தெரியவில்லை.

6 ஆயிரம் இணைப்புகள்

விருதுநகர் நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார்:-

விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலை உள்ளது. தற்போதைய நிலையில் நகராட்சி நிர்வாகமே நேரடியாக வீட்டு இணைப்புகள் கொடுத்துவரும் நிலையில் நகராட்சி ஆவணங்கள் படி 6 ஆயிரம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நகரில் 20 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க டெண்டர் விடப்பட்டது. மீதமுள்ள இணைப்புகள் எப்போது கொடுத்து முடிக்கப்படும் என்பதை பற்றி உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலைநீடிக்கிறது. அதிலும் புதிதாக ஒருவர் வீடு கட்ட அனுமதி கேட்டால் அந்தப்பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வாய்ப்பு உள்ளதா என்பதை பற்றி ஆய்வு செய்யாமல் உடனடியாக பாதாள சாக்கடை கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. மொத்தத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் உரிய ஆர்வம் காட்டாமல் பாதாள சாக்கடை கட்டணம் வசூலிப்பதில் தான் நகராட்சி நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

5 ஆண்டுகள்

ராஜபாளையத்தை சேர்ந்த சரவணன்:-

ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் பகுதி மக்கள் பல்வேறு விபத்துகளில் அவதிப்பட்டு வந்தனர்.

பல இன்னல்களை பொதுமக்கள் சந்தித்தனர். தற்போது பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்தவுடன் சாலை அமைக்க வேண்டும். இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சந்தித்த இன்னல்கள்

ராஜபாளையம் லலிதா:-

ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகளால் பல இன்னல்களை சந்தித்தோம். ஒவ்வொரு வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பைப்லைன் அமைப்பதற்கு இணைப்பு வழங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொத்தத்தில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்