பெரம்பலூர்
பெரம்பலூரில் ரெயில் நிலையம் அமைப்பது எப்போது?
|பெரம்பலூரில் ரெயில் நிலையம் அமைத்து ரெயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டயர் தொழிற்சாலை
பெரம்பலூர் மாவட்டம் கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திருச்சியில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்ட தலைநகரான பெரம்பலூரில் மருத்துவக்கல்லூரிகள், பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. பிற மாவட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதில் பெரம்பலூர் பெரும்பங்கு வகித்து வருகிறது.
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய டயர் தொழிற்சாலை உள்ளது. குவாரிகள், புளுமெட்டல் தொழில்களுக்கும் பெயர் பெற்றதாகும். சர்க்கரை ஆலை எறையூரில் தொழில்பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்த தொழில்பூங்கா பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று நம்பப்படுகிறது.
24 மணிநேர பஸ் போக்குவரத்து
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. மேலும் பருத்தி, மக்காச்சோளம் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முதன்மையான இடத்தில் இருந்து வருகிறது. இந்தநிலையில் பெரம்பலூரில் தொழில்கள் தொடர்பாகவும், வேலைவாய்ப்பிற்காகவும் வடமாநில மக்கள் குடியேறுவது அதிகரித்து வருகிறது. மேலும் பெரம்பலூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகையும் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் பெரம்பலூரிலிருந்து தமிழகத்திற்கு எந்த பகுதிக்கும் எளிதாக சென்றுவரும் வகையில் 24 மணிநேரமும் பஸ் போக்குவரத்து வசதி அமைந்துள்ளது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
ரெயில் நிலையம்
இந்தியாவிலேயே ரெயில் நிலையம் இல்லாத ஒருசில மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்ட மக்கள் ரெயில் போக்குவரத்து வசதியை பயன்படுத்த பெரம்பலூர் அருகே உள்ள அரியலூர் அல்லது திருச்சிக்கு தான் செல்ல வேண்டும். இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு ரெயில் போக்குவரத்து வசதி என்பது கனவாகவே இருந்து வருகிறது. இம்மாவட்ட மக்கள் 65 ஆண்டுகாலமாக ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா முயற்சியினால் கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர்-பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கு ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் பொருட்டு சர்வே நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு சாத்தியமில்லை எனக்கூறி அத்திட்டம் கைவிடப்பட்டது.
சர்வே நடத்த உத்தரவு
இந்தநிலையில் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக மருதராஜா இருந்தபோது கடந்த 2018-ம் ஆண்டு அரியலூரிலிருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல் வரையிலான ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். ஆனால் சர்வே முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்த கோரிக்கை பரிசீலனை செய்த மத்திய அரசு அரியலூரிலிருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கலை இணைக்கும் வகையில் 108 கி.மீ.தூரம் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக சர்வே நடத்த மத்திய ரெயில்வே போக்குவரத்து துறை இயக்குனராக தன்னன்ஜெயசிங் இருந்தபோது ரெயில் போக்குவரத்திற்கு சர்வே நடத்திட உத்தரவிட்டார். அதற்காக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
தற்போது பெரம்பலூர் எம்.பி.யாக உள்ள பாரிவேந்தர், பிரதமர் மோடி மற்றும் மத்திய ரெயில்வே மந்திரியை நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு திட்டமான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட மக்கள் கூறியதாவது:-
கனிம வளங்கள்
சிறுவாச்சூரை சேர்ந்த தொழில்முனைவோர் சீதாபதி:- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவில், செட்டிகுளம் தண்டாயுதபாணி, ஏகாம்பரேசுவரர் கோவில், துறையூரில் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளன. இந்த கோவில்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளான காரை, தெரணி, கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் புளுமெட்டல், ஜிப்சம் உள்ளிட்ட கனிமவளங்கள் அதிகம் உள்ளன. கனிமவளங்களையும், உற்பத்தி பொருட்களையும், இந்தியாவின் பிறபகுதிகளுக்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில் சிறுவாச்சூர் அருகே அமைத்து ரெயில் நிலையம் அமைத்து செட்டிகுளம், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல் ரெயில்வே நிலையத்துடன் இணைத்தால், இந்தியாவின் வடகோடிக்கும், தென்பகுதிக்கும் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல வசதியாக இருக்கும். இதேபோல் பக்தர்கள் மற்றும் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம், அரியலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் பயன்பெறுவார்கள். எனவே அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கு ரெயில்பாதை அமைத்து ரெயில்களை விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகள், வயதானவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த ஜோதிடவியல் மற்றும் வாஸ்து நிபுணர் ஸ்ரீராமன்ஆதித்யா:- சென்னை, குருவாயூர் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்வதற்கு அரியலூர் ரெயில்நிலையத்திற்கு காரில் சென்று 3 அல்லது 4 நாட்களுக்கு வாகனத்தை அரியலூரில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டியுள்ளது. பெரம்பலூர் நகரம் சமீபத்தில் வேகமாக விரிவடைந்து வருகிறது. பெரம்பலூரை சேர்ந்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே போன்ற பெருநகரங்களில் சாப்ட்வேர் துறையில் வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக பெரம்பலூரில் ரெயில்நிலையம் அமைத்து அதனை அரியலூர் ரெயில்நிலையத்துடன் முதல்கட்டமாக இணைத்தால், சென்னை, திருச்சி மார்க்கம் ஆகிய இருவழித்தடங்களிலும் பெரம்பலூர் மக்கள் ரெயில் பயணம் செய்திட வசதியாக இருக்கும்.
வளர்ச்சி பெற்ற நவீன காலகட்டத்தில் பலர் கார்களில் பயணம் செய்தாலும், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ரெயில்பயணம் மிகவும் வசதியானதாகும். மேலும் நோயாளிகள், வயதானவர்கள், சிறுவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பயணம் செய்திட ரெயில் பயணம் மகிழ்ச்சியை தரும் என்பதால், பெரம்பலூரில் வெகுவிரைவில் ரெயில்நிலையம் அமைத்து ரெயில்கள் விட பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருமாவட்ட மக்கள் பயன்பெறுவர்
ஆயுள்காப்பீட்டுக்கழக வளர்ச்சி அதிகாரி விஜயபாஸ்கர்:- எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும். நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடிக்கு 14 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு முயற்சியினால் அமைக்கப்பட்டு மன்னார்குடி-கோவை, மன்னார்குடி-சென்னை, மன்னார்குடி-ஜோத்பூர் ஆகிய பெருநகரங்களுக்கு ரெயில்கள் விடப்பட்டுள்ளன. அதாவது மன்னார்குடி ரெயில்வே நிலையத்திற்கு அப்பால் வேறு ரெயில்நிலையத்தை இணைக்கப்படவில்லை. ரெயில்கள் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு நீடாமங்கலத்திற்கு வந்து ரெயில் லோகா என்ஜின் மாற்றி பிறகு தஞ்சை வழியாக சென்னைக்கும், திருச்சிக்கும், ஜோத்பூருக்கும் சென்று வருகின்றன. அதேபோல் அரியலூரில் இருந்து பெரம்பலூர் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. முதற்கட்டமாக பெரம்பலூரில் ரெயில்நிலையம் அமைத்து அதனை அரியலூர் ரெயில் நிலையத்துடன் இணைத்து ரெயில்கள் இயக்கினால், இருமாவட்ட மக்களும் அதிக பயன்பெறுவார்கள்.
பால் உற்பத்தி
பெரம்பலூர் கேட்டரிங் தொழில்முனைவோரான முத்துவீரன்:- பெரம்பலூர் மாவட்டம் பால்உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சென்னை பெருநகரத்திற்கு தினந்தோறும் 1½ லட்சம் முதல் 2 லட்சம் லிட்டர் வரை பால் பதப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி சாகுபடி அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. செட்டிகுளம், பொம்மனப்பாடி, இரூர், சத்திரமனை போன்ற பகுதிகளில் வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. பருத்திக்காட்டு இதிகாசம் என்றுஅழைக்கப்படும் நெற்குணம் பகுதியில் பருத்தி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. லாடபுரம், அன்னமங்கலம் போன்ற பச்சைமலை அடிவார பகுதிகளில் மலர்சாகுபடி செய்யப்படுவதால், வாசனை மற்றும் நறுமணப்பொருட்கள் உற்பத்தி ஆலைகளை தொடங்கி பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி பொருட்கள் மற்றும் விளைபொருட்களையும், மதிப்பு கூட்டுபொருட்களையும் ரெயில்கள் மூலம் பிறமாநிலங்களுக்கும் எளிதாக எடுத்துசெல்லும் வகையில் பெரம்பலூருக்கு ரெயில்பாதை அமைத்து ரெயில்கள் விடவேண்டும். மேலும் பெரம்பலூர் நகரம் உயர்கல்வி நிறுவனங்களுக்கும், புளுமெட்டல் தொழிலுக்கும் பெயர்பெற்றதாகும். உணவு உற்பத்தித்தொழிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் மளிகைப்பொருட்கள், இதர மூலப்பொருட்கள், காய்கறிகள், கனிகள் பெரம்பலூர் வந்தடைவதற்கு காலதாமதமும், அலைச்சலும் ஏற்படுகிறது. தொழில்வளர்ச்சியில் பின்தங்கியதாக கருதப்படும் பெரம்பலூர் மாவட்டம் பொருளாதார வளர்ச்சி அடைய, பொருட்கள் எளிதில் பெரம்பலூர் வந்துசேர ரெயில்போக்குவரத்து மிகவும் அவசியமாகும். மேலும் பெரம்பலூர் பகுதி பக்தர்கள், பொதுமக்கள் காசி, ராமேஸ்வரம், குருவாயூர், மந்திராலயம் போன்ற புண்ணியதலங்களுக்கு செல்லவும், ரெயிலில் வடஇந்திய யாத்திரை மேற்கொள்ளவும், சேலம், அரியலூர் மற்றும் திருச்சி நகரங்களுக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரம்பலூரிலேயே ரெயில்நிலையம் அமையுமானால், பொதுமக்களின் அலைச்சல் வெகுவாகு குறையும். ரெயில்களில் முன்பதிவு செய்து புண்ணியதலங்களுக்கும், சென்னை, காஞ்சீபுரம், மும்பை, ஐதராபாத் போன்ற தொலைதூர பயணங்கள் செய்திடவும் பெரிய வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.