இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் எப்போது நிகழும்? - பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் விளக்கம்
|இன்று நிகழ்ந்த சந்திரகிரகணத்தை இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் காண முடிந்தது.
சென்னை,
சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.
முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.
இன்று முழு சந்திர கிரகணம் காணப்பட்டது. இந்தநிலையில், இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. முழு கிரகணத்தின் முடிவு நேரம் - 5.12 மணி ஆகும். பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் - 6.19 மணி என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் பல பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படவில்லை. கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இறுதி நிலைகள் கானப்பட்டது.
இந்த நிலையில், சந்திர கிரகணம் தொடர்பாக, சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்திரராஜாபெருமாள், செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது,
இன்று நடைபெற்றது முழு சந்திரகிரகணம் ஆகும். இது ஆஸ்திரேலியா, போன்ற பல்வேறு நாடுகளில் பார்க்க முடிந்தது. மழை காரணமாக முன்பே கணித்தபடி சென்னையில் தென்படவில்லை. எனினும், உலகின் பல பகுதியிலும், இந்தியாவின் பிற பகுதியிலும் எப்படி கிரகணம் தென்பட்டது என்பதை நேரடியாக காண்பித்து வந்தோம்.
இதையடுத்து இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாளில் கானலாம். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.