< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தை விஞ்சும் புதிய பிரமாண்டம் - எப்போது திறக்கப்படும்? அமைச்சர் தகவல்
மாநில செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தை விஞ்சும் புதிய பிரமாண்டம் - எப்போது திறக்கப்படும்? அமைச்சர் தகவல்

தினத்தந்தி
|
11 Oct 2022 2:49 PM IST

கோயம்பேடு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை மாநகரில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதற்காக கோயம்பேடு பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆம்னி பஸ்களும் இங்கிருந்துதான் புறப்பட்டு செல்கிறது.

இந்த பஸ் நிலையம் அருகே கோயம்பேடு மொத்த விற்பனை வணிக வளாகமும் அமைந்துள்ளதால் கோயம்பேடு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்போது பஸ் நிலையத்திற்கு உள்ளும், கோயம்பேடு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு வண்டலூர்-வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அப்பகுதியில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதால், வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டிய கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தை பஸ் நிலையத்துக்காக தேர்வு செய்தனர். இதனையடுத்து வண்டலூரில் அமைக்கப்பட இருந்த புறநகர் பஸ் நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

திருச்சி, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களை சிரமம் இன்றி இனிதாக மேற்கொள்வதற்காகவும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் கடந்த ஆண்டே மாநகர பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மாநகர பஸ் நிலையத்தில் மட்டும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ரூ. 400 கோடியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்