< Back
மாநில செய்திகள்
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்...!
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்...!

தினத்தந்தி
|
8 March 2023 6:17 PM IST

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பலவேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது.

இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு ஆகும்.

தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இந்நிலையில், டுவிட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாஜ டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கையில்,

எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.

விடைத்தாட்களில் அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். ஓஎம்ஆர்(omr) விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்