செங்கல்பட்டு
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு
|கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் 2-வது கட்டமாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பஸ்நிலையம் மற்றும் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு கரையோர பகுதி, பாலப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கூடாரங்கள் அமைத்தும், பெட்டி கடைகளாகவும் காய்கறி மற்றும் பூக்கடை, பழக்கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகள் பெருகியதால் புதுப்பட்டினத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 14-ந்தேதி முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் பேரில் புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் புதுப்பட்டினம் பஸ் நிலையத்தில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று 2-வது கட்டமாக புதுப்பட்டினம்-விட்டிலாபுரம் சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால், வருவாய் ஆய்வாளர் வனத்தாட்சி, புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பாபு முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றி வந்தனர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிக்கு ஒருசில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து புதுப்பட்டினம் பஸ் நிலையம் அருகில் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வியாபாரிகள், அவரிடம் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விநாயகர் சதுர்த்தி வரை சாலையோர கடை போட அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் பிரவீன்டேனி சாலையோர நடைபாதைகளை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்ட கடைகளை மட்டுமே கலெக்டர் உத்தரவின் பேரில் அகற்றி வருவதாகவும், இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் வருவாய்த்துறை மற்றும் புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகத்திடம் பரிந்துரைத்து விநாயகர் சதுர்த்தி வரை நடைபாதைகளில் தற்காலிகமாக கடை வைக்க அனுமதி வாங்கி தருவதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.