< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..?- வெளியான தகவல்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..?- வெளியான தகவல்

தினத்தந்தி
|
6 Jun 2024 9:24 PM GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே அந்த தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலும் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. ஆனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்புதான் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். எனவேதான் தமிழக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது அந்த தொகுதியையும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறவில்லை. ஒரு தொகுதி காலியான பிறகு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

அதன்படி இந்த தொகுதியில் தேர்தல் நடத்த வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவகாசம் இருக்கிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பு வெளிவந்து விடும்" என்று அவர் கூறினார்.

மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறார். அதில் அவர் ஒரு தொகுதியில் மட்டுமே பதவியேற்பார். எனவே மற்றொரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன், இதில் காலியாகும் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும்.

மேலும் செய்திகள்