பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு எப்போது? - அதிகாரி விளக்கம்
|புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் செங்குத்து வடிவில் தூக்குப்பாலம் பொருத்தப்பட்டு அதை திறந்து மூடுவதற்கான சாதனங்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ரெயில் பாலத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாம்பம் பாலத்தில் ரெயில் எஞ்சினை இயக்கி சோதனை செய்யப்பட்டபோது மதுரை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதுபோல் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம், பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ராமேசுவரம் வரை வழக்கம் போல் ரெயில்கள் இயக்கப்படும்.
புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பழைய தூக்குப்பாலத்தை அகற்றி வேறு ஒரு இடத்தில் நினைவுச்சின்னமாக வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகவும் பாதுகாப்பாக அந்த தூக்குப்பாலத்தை அகற்றுவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன." என்றார்.