< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் தேங்கும் நிலை மாறுவது எப்போது?
திருச்சி
மாநில செய்திகள்

கழிவுநீர் தேங்கும் நிலை மாறுவது எப்போது?

தினத்தந்தி
|
30 Oct 2022 8:41 PM GMT

கழிவுநீர் தேங்கும் நிலை மாறுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து 3-வது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். திருச்சி மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக இல்லாத போதிலும் ஆண்டு வரி வருவாய் ரூ.615 கோடியை ஈட்டுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரி வருவாயில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் 382 நகரங்களில் திருச்சி 262-வது இடம் பிடித்து மிகவும் பின்தங்கி உள்ளது.

அதற்கு ஏற்றாற்போல் திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகரில் தூய்மை பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் சாலைகள் சீரமைக்கப்படாமலும், சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர்.

சாக்கடை கழிவு நீர்

இந்நிலையில் மாநகராட்சியின் 50-வது வார்டுக்கு உட்பட்ட காஜாபேட்டையை அடுத்த பெல்ஸ்கிரவுண்டு பகுதியின் அருகே உள்ள ஆதிசக்தி மாரியம்மன் கோவில் மற்றும் காஜாபேட்டை பகுதி, அண்ணாநகர், வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. குப்பைக்கூளங்கள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. பன்றிகளும், மாடுகளும் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொது கழிவறை இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படும் நிலை உள்ளது.

இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கொசுக்கள் தொல்லை

குடும்ப தலைவி செல்வி:- நான் இந்த பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறேன். இந்த பகுதியில் மழை பெய்தால் மழைநீர் வீட்டு முன்பு தேங்கி விடும். மேலும் வீடுகளின் உள்ளே தண்ணீர் வந்து விடுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது தொடர்பாக இந்த வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

பொது கழிப்பிடம்

ெபல்ஸ்கிரவுண்டு பகுதியை சேர்ந்த ராமசாமி:- இந்த பகுதியில் 20 வருடங்களாக எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தால், அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் இது ரெயில்வே துறைக்கு சொந்தமான இடம் என்று கூறுகிறார்கள். இதனால் மாநகராட்சி மூலம் எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை. மேலும் பொது கழிப்பிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து விட்டு சென்றனர். ஆனால் இதுவரை பொது கழிப்பிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புறக்கணிப்பு

குடும்பத்தலைவி சரசு:- எனது வீட்டுக்கு முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவுகிறது. தீராத காய்ச்சல், வயிற்று வலி போன்றவற்றால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் செந்தண்ணீர்புரத்தில் இருந்து பன்றிகள் வந்து இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுநீரில் மேய்ந்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி புகார் கொடுத்தால், கவுன்சிலர் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலும் சாலைகளை சீரமைக்காமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியை திருச்சி மாநகராட்சி புறக்கணித்து வருகிறது. எனவே இந்த நிலையை மாற்றி கழிவுநீரை அகற்றவும், மீண்டும் கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால் ஏற்படுத்தவும், குப்பைகளை முறையாக அள்ளி அப்புறப்படுத்தவும், கழிப்பிடம் அமைக்கவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்