< Back
மாநில செய்திகள்
திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக உருவாவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக உருவாவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
21 Nov 2022 4:45 PM IST

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவுப்பு வெறும் ஏட்டளவிலேயே உள்ளதால் எப்போது தலைமை மருத்துவமனையாக உருவாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்ட பின்னர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்டதாக...

ஆனால் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது என அறிவித்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை அரசாணையும் வெளியிடப்படவில்லை, ஆஸ்பத்திரியில் பெயர் பலகையையும் கூட மாற்றவில்லை. தமிழகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட 19 ஆஸ்பத்திரிகளில் திருத்தணி ஆஸ்பத்திரியும் ஒன்றாகும்.

மேலும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் கூடுதலாக டாக்டர்கள், பல்வேறு படுக்கை வசதிகள், புதிய கட்டிடங்கள், அனைத்து துறை ஆய்வகங்கள், பல்துறை சிறப்பு டாக்டர்கள், சி.டி. ஸ்கேன், அறுவை அரங்குகள் போன்ற கூடுதல் வசதிகளைப் பெறும். இதனால் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராமப்புற மக்கள் பெரிதும் பயன்பெறுவா்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்நோயாளி, வெளிநோயாளிகள் உணவு சாப்பிட பெரிதும் சிரமப்படுகின்றனர். கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு ஆவின் பால் நிறுவனம் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உயர் ரக சிகிச்சை கிடைக்க வசதியாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது வெறும் ஏட்டளவிலேயே உள்ளதால் அதை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்