திண்டுக்கல்
தோளில் தூக்கி வைத்து சாலையை கடந்தபோது ஆம்னி பஸ்சின் கதவு மோதி குழந்தை பலி:தந்தை கண் எதிரே பரிதாபம்
|தோளில் தூக்கி வைத்து சாலையை கடந்தபோது ஆம்னி பஸ்சின் கதவு மோதியதில் குழந்தை பலியானது. தந்தையின் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் அரங்கேறியது.
தோளில் தூக்கி வைத்து...
கொடைக்கானல் கால்ப்கிளப் ரோட்டை சேர்ந்தவர் ஆசோர் அருண்குமார் (வயது 28). அவருடைய மனைவி ரோகிணி மேரி. இந்்த தம்பதிக்கு 2½ வயதில் ஆரோன் மேத்யூ என்ற குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் ஆசோர் அருண்குமார் சொந்த வேலை காரணமாக காரில் வத்தலக்குண்டுவுக்கு சென்றார். அப்போது அவர் தனது குழந்தையும் அழைத்து சென்றார். பின்னர் அவர் வேலை முடிந்து கொடைக்கானலுக்கு திரும்பினார். பெருமாள் மலை பழனி பிரிவு அருகே சாலையோரம் காரை நிறுத்தினார். அதன்பின்னர் அவர் தனது குழந்தையை தோளில் தூக்கி வைத்து கொண்டு சாலையை கடந்து அங்குள்ள டீக்கடைக்கு செல்ல முயன்றார். அப்போது சாலையை கடப்பதற்காக இருபுறமும் வாகனங்கள் வருகிறதா? என்று பார்த்தார்.
குழந்தை பலி
இதற்கிடையே அவரது தோளில் இருந்து குழந்தை துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது கொடைக்கானலில் இருந்்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் சென்றது. அந்த பஸ்சின் இடது பக்கம் பயணிகளின் உடமைகள் வைப்பதற்காக உள்ள அறையின் கதவு திறந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. அந்த பஸ் ஆசோர்அருண்குமாரை கடந்து சென்றபோது திறந்திருந்த கதவு அவர் மீது மோதியது.
இதில் ஆசோர்அருண்குமார் மற்றும் அவரது தோளில் இருந்த குழந்தை கீேழ விழுந்தனர். இவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருண்குமார் காயத்துடன் கதறி அழுதபடி கீழே கிடந்த தனது குழந்தையை எடுத்து மடியில் வைத்து பார்த்தார். ஆனால் குழந்தை எந்த அசைவும் இன்றி இறந்திருந்தது.
டிரைவர் கைது
விபத்து குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆசோர்அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் பாஸ்கரன் (57) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
துள்ளிக்குதித்த குழந்தை கண் இமைக்கும் நேரத்தில், தந்தையின் கண் எதிரே இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.