'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து
|என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பாடல் பாடினார்.
சென்னை,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியில் பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த அமலாக்கத்துறை சோதனையை விமர்சிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே என்ற பாடல் ஆகும். தற்போது இது வைரலாக பேசப்பட்டு வருகிறது.