விருதுநகர்
முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் என்னென்ன?
|கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் குறித்து சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு விருதுநகர் திரும்பிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் "தினத்தந்தி"க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் சாதி மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி மாநாட்டில் சுட்டி காட்டப்பட்டது. இதேபோன்று போக்சோ வழக்குகளில் ஒரு வழக்கில் கூட தண்டனை பெற்றுத் தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இங்கு சாதி மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் கடந்த 3 ஆண்டுகளில் 469 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டில் 139 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படுவதற்கு காரணம் என்னவெனில் பெண் குழந்தைகள் இடையே நல்ல எண்ணத்தில் தொடுதல், தவறான எண்ணத்தில் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், பெண்கள் தைரியமாக போலீசாரிடம் நம்பிக்கை வைத்து புகார் தெரிவிக்கும் போது இதில் சமரசம் ஏதும் செய்யாமல் வழக்குப்பதிவு செய்யப்படுவதுமே வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டதற்கு காரணம் ஆகும்.
குற்ற வழக்குகளில் 56 சதவீத வழக்குகளில் துப்பு துலக்கப்பட்ட நிலையில் 51 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகன விபத்துகள் 10 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்தத்தில் விருதுநகர் மாவட்ட போலீஸ் துறையின் செயல்பாட்டில் திருப்தி அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாவட்டத்தில் உள்ள வீரசோழன், எம்.ரெட்டியபட்டி, பரளச்சி, கூமாபட்டி ஆகிய 4 போலீஸ் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும். 56 போலீஸ் நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த நான்கு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும். வாகனங்கள் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் வாகனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் வலியுறுத்தினேன். இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.