சட்டசபையில் கேவலமான நாடகம் அரங்கேற்றம் - வானதி சீனிவாசன்
|சட்டசபையில் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு கவர்னருக்கு தொந்தரவு கொடுத்து தி.மு.க. கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.
கேவலமான நாடகம்
தமிழக சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு:-
சட்டப்பேரவையில் ஆளும் கட்சியும், கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஒரு கேவலமான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். தங்கள் அரசாங்கத்தின் திறமையின்மையை மறைக்கவும், நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய லஞ்ச, ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கவும், அவர்களின் வாரிசு அரசியலை மக்கள் அதிகமாக பேசாதபடி பார்த்துக்கொள்ளவும், தற்போது கவர்னருக்கு எதிர்ப்பு என்கிற கேவலமான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
கண்டிக்கிறோம்
மாநிலத்தின் கவர்னர் உரையாற்றும்போது ஆளுங்கட்சி தங்களுக்கு எதுவும் சம்பந்தம் இல்லாததுபோல, கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு அவரின் உரையை அதுவும், அவ்வையாரின் தமிழ் வரிகளை கூறி ஆரம்பித்த அந்த உரைக்கு எதிராக கோஷமிட்டு, அந்த உரையை அவர் படிக்க ஆரம்பிக்கும்போது அதிகமாக தொந்தரவு கொடுத்து, அதற்கு பின்பாக அவர்கள் வெளியேறினார்கள்.
அது மட்டுமல்லாமல் கவர்னரின் உரை என்பது, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எதையெல்லாம் மாநில அரசாங்கம் தயாரித்து கொடுக்கிறதோ, அதையெல்லாம் கவர்னர் படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், கவர்னரை தங்கள் சிந்தாந்தத்தை புகழ்பாட கூடிய ஒருவராக அரசு நினைக்க முடியாது.
அரசின் திட்டங்களையோ, செயல்களையோதான் கவர்னர் உரையில் குறிப்பிடுவார். இதுதான் பாரம்பரியமாக இருக்கக்கூடிய மரபு. ஆனால் தங்கள் சிந்தாந்தங்களுக்கு எதிராக அவர் வெளியில் பேசுகிறார் என்று கடுமையாக விமர்சனங்களை முன் வைக்கக்கூடியவர்கள், சட்டப்பேரவையை ஒரு களமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இம்மாதிரியான ஆளுங்கட்சியின் போக்கு என்பது மாநில நலனுக்கு உகந்தது இல்லை.
தனிப்பட்ட தாக்குதல்
எந்தெந்த வரிகளை கவர்னர் விட்டுவிட்டாரோ அதுபற்றி கவர்னரின் அலுவலகத்திடம்தான் மாநில அரசு பேச வேண்டும். ஆனால் அவரிடம் பேசி உரைக்கு சரியாக ஒப்புதல் பெறாமல் அச்சிட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் அதிகாரத்தை கவர்னர் மீது காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் பேச நினைப்பதைத்தான் கவர்னரும் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா?.
இந்த விஷயங்களை பொறுத்தவரை மாநில அரசு தங்களின் உறவு பேணாத நிலையை காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து உள்ளனர். கவர்னர் பேசி முடித்த பிறகு முதல்-அமைச்சர் தனது தரப்பு பற்றி பேசுகிறார். அரசுக்காக பேசுவோர் இங்கு உண்டு. அமைச்சர்கள் பேசுவார்கள். ஆனால் கவர்னர் அலுவலகத்திற்கு எந்த விஷயங்களையும் வெளியே சொல்வதற்கான வாய்ப்பு இல்லை.
தாளத்துக்கு ஏற்றபடி...
நீட் மசோதா தொடர்பாக தேவையான தகவல்களை கொடுத்ததாக மாநில அரசு கூறுகிறது. ஆனால் கவர்னர் என்ன கேட்டார்? நீங்கள் என்ன தகவலை கொடுத்தீர்கள்? என்பதை ஏன் வெளியில் கூறவில்லை.? நீங்கள் நினைக்கிற, சொல்கிற விஷயங்களை கவர்னர் சொல்லவில்லை என்பதற்காக அவரை கூப்பிட்டு வந்து சட்டசபையில் அசிங்கப்படுத்த முடியுமா?.
இதுதான் ஜனநாயக போக்கா?. இப்படி ஒரு தவறான முன் உதாரணத்தை தி.மு.க., முதல்-அமைச்சர் நடத்தி இருக்கிறார்.
அவர்களின் தயவில் நின்று கொண்டிருப்பவர்கள், அவர்கள் போடும் தாளத்துக்கு ஏற்றபடி நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் இங்கு நடந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.