விவாகரத்து வழக்குகளில் கோர்ட்டுகள் பின்பற்ற வேண்டியது என்ன? - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|மனைவி விவாகரத்து கோரும் வழக்குகளில் கோர்ட்டுகள் என்ன அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, கீழ்கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு விவாகரத்து அளிக்கப்படவில்லை. சத்தீஷ்கர் ஐகோர்ட்டிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.
பெண்ணின் வக்கீல் துஷாந்த் பரசார் வாதிடுகையில், கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் கூறினார். கீழ்கோர்ட்டும், ஐகோர்ட்டும் இதில் சரிவர கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், அப்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில் கூறியிருப்பதாவது:-
விவாகரத்து கோரும் பெண்ணுக்கும், அந்த ஆணுக்கும் 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஒரு குழந்தை பிறகு, 2006-ம் ஆண்டில் இருந்து இருவருக்கிடையே மோதல் நடந்து வந்துள்ளது. மனைவியின் நடத்தை பற்றி கணவர் சந்தேகப்பட்டுள்ளார். கொடுமைப்படுத்தி உள்ளார்.
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. புகுந்த வீட்டை விட்டு மனைவி வெளியேறி விட்டார். 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களின் திருமண வாழ்க்கை முடிந்து விட்டது. கோர்ட்டு விவாகரத்து வழங்குவது மட்டும்தான் பாக்கி.
கீழ்கோர்ட்டும், ஐகோர்ட்டும் எந்திரத்தனமாகவும், பதற்றமாகவும் செயல்பட்டுள்ளன. இந்து திருமண சட்டத்தின் 13(1)(ஐஏ) பிரிவு, என்ெனன்ன காரணங்களுக்காக விவாகரத்து அளிக்கலாம் என்று கூறுகிறது. அந்த பிரிவின்படி, கொடுமைப்படுத்துதல் என்ற வார்த்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட அர்த்தம் எதுவும் இல்லை. அதனால், சூழ்நிலைக்கேற்ப அதை பயன்படுத்திக்கொள்ள கோர்ட்டுகளுக்கு உரிமை உள்ளது.
கொடுமைப்படுத்துதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடும். பெண்ணுக்கு கொடுமையாக தெரிவது, ஆணுக்கு அப்படி தெரியாது. ஆகவே, பெண் விவாகரத்து கோரும் வழக்குகளில், கோர்ட்டுகள் மிகவும் பரந்த அணுகுமுறையுடனும், நெகிழ்வுத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். மகிழ்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய வீடு, சண்டை களமாக மாறுகிறது. சண்டையை நேரில் பார்க்கும் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.