முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? - அமைச்சர் பொன்முடி கேள்வி
|முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மரக்காணம் சம்பவத்தை வைத்து எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் இதனை அரசியலாக்க விரும்பவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்புகள் காரணமாக தமிழக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க, தனியாக போலீஸ் அதிகாரிகளை நியமித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,077 இருசக்கர வாகனங்களும், 67 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய வியாபாரிகள் 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு செய்திருக்கிற முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் எவ்வித வேறு கருத்தும் இல்லை. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.