< Back
மாநில செய்திகள்
எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய தி.மு.க.வினருக்கு என்ன தகுதியிருக்கிறது? - டிடிவி தினகரன் காட்டம்
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய தி.மு.க.வினருக்கு என்ன தகுதியிருக்கிறது? - டிடிவி தினகரன் காட்டம்

தினத்தந்தி
|
31 Jan 2024 5:12 PM IST

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது தகுதியை அறிந்து பேச வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை பற்றிய தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. தி.மு.க.வை தீயசக்தி எனக்கூறிதான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு சாய்த்த எம்.ஜி.ஆர், மறைந்த பின்பும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது.

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொதுவாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் ஜெயலலிதாவை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற தி.மு.க.வினருக்கு என்ன தகுதியிருக்கிறது?. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை தி.மு.க.வினர் மறந்துவிடக்கூடாது.

எம்.ஜி.ஆரின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும்போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுகள், எம்.ஜி.ஆரின் பெயருக்கும், புகழுக்கும் எந்தவகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை தி.மு.க.வினர் உணர வேண்டும்.

மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லையெனில் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்