< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினருக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பா.ஜ.க.வினருக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி

தினத்தந்தி
|
26 Sept 2024 3:59 PM IST

தேர்தல் பத்திர நன்கொடையை குவித்துக் கொண்டு ஊழலுக்கு துணை போகும் ஆட்சி தான் பா.ஜ.க. ஆட்சி என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் எதிர்கட்சியினரை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, வழக்குகள் பதிவு செய்து அடக்குமுறை ஏவிவிடப்பட்டு வருகிறது. இதில் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் மீது பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது போல தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, ஊழல் செய்ததாக கூறி 2023-ல் அவர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன், கூடுதலாக பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களாக சிறைவாசத்தை அனுபவித்து விட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

அமலாக்கத்துறையின் அடக்குமுறையை அரசியல் பேராண்மையோடு எதிர்கொண்டதையும், தலைமையின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், கட்சியின் மீது கொண்டுள்ள ஆழமான பிடிப்பாலும் எவ்வளவோ மிரட்டியும் அமலாக்கத்துறையால் அவரை வென்றெடுக்க முடியவில்லை. நீதியின் மீது நம்பிக்கை வைத்து போராடிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனஉறுதியை பாராட்டுகிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா மீது ஒரு புகார் எழுப்பப்பட்டு, அதற்கு அம்மாநில கவர்னர் வழக்கு தொடர அனுமதியளித்து பழிவாங்கும் போக்கோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நலன்சார்ந்த ஆட்சி நடத்தி வருகிற முதல்-மந்திரி சித்தராமையாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் இத்தகைய ஜனநாயக விரோத செயல்களை பா.ஜ.க. ஏவிவிடுகிறது. முதல்-மந்திரி பதவியை ரூபாய் 2,500 கோடிக்கு ஏலம் விட்டதாக பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? பா.ஜ.க. தலைவர்களே பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டு கூறியதற்கோ, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபட்டதைப் பற்றி இதுவரை பா.ஜ.க. எந்த கருத்தும் கூறவில்லை. கர்நாடகத்தில் இருக்கிற எந்த பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று எவராலும் மறுக்க முடியுமா?

சமீபத்தில் மத்திய அரசில் அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ள எச்.டி. குமாரசாமி மீது ரூபாய் 100 கோடி சட்டவிரோத கனிமவள ஊழல் இருப்பதை எவரும் மறுக்க முடியுமா? அவரை எந்த அடிப்படையில் அமைச்சராக சேர்த்துக் கொண்டீர்கள்? அவர்மீது லோக் ஆயுக்தா வழக்கு தொடர கர்நாடக கவர்னர் அனுமதி மறுத்தது ஏன் ? கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், 2014 முதல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 25 எதிர்கட்சித் தலைவர்களை பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு முன்பு அவர்களில் 23 பேர்கள் மீது இருந்த வழக்குகளை உங்களது அமைப்புகள் நிரபராதிகள் என விடுவித்திருப்பதற்கு இந்த அரசு என்ன பதில் கூறப்போகிறது? மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, சுகந்து அதிகரி, எச்.டி. குமாரசாமி, அஜித்பவார், அசோக் சவான், நாராயண் ரானே மற்றும் சமீபத்தில் முனிரத்னா போன்ற ஊழல் கரைபடிந்தவர்கள் பா.ஜ.க.வின் சலவை எந்திரத்தின் மூலமாக புனிதர்களாக மாற்றிய அதிசயத்தை நிகழ்த்திய பா.ஜ.க.வினருக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை கொடுத்து அதானி, அம்பானி உள்ளிட்ட முதலாளித்துவ சக்திகளை வளர்த்து, தேர்தல் பத்திர நன்கொடையை குவித்துக் கொண்டு ஊழலுக்கு துணை போகும் ஆட்சி தான் இந்த பா.ஜ.க. ஆட்சி.

எனவே, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. நடத்தும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறீர்கள். இந்த பாடத்திலிருந்து படிப்பினையை கற்றுக் கொள்ளாமல் பா.ஜ.க.வினருக்கு ஒரு நீதி, எதிர்கட்சி கட்சிகளை சேர்ந்த சித்தராமையாவுக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒரு நீதியா? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற பா.ஜ.க.வினரே உங்களது புனிதர் வேடத்தை கலைக்கிற வகையில் தான் சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்