சென்னை
கிளாம்பாக்கம்-குத்தம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் எந்த நிலையில் இருக்கிறது?
|விரைவில் திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பஸ் நிலையங்களின் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது? என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
சென்னை சி.எம்.டி.ஏ. கூட்டரங்கில் கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பஸ் நிலையங்களில் நடந்து வரும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல்மிஸ்ரா, மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், தாம்பரம் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து) அன்வர்பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், அப்பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும் 2. சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகளையும், முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பஸ் நிறுத்திமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மழைநீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமையவுள்ள மருத்துவ வசதிகள் மற்றும் போலீஸ் நிலையம் குறித்தும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மேலும், குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் அமைப்பு, சென்னை-பெங்களுரு நெடுஞ்சாலையிலிருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் அணுகு சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த பஸ் நிலையத்தில் மாநகர பஸ்கள் நிறுத்தம், புறநகர் பஸ்கள் நிறுத்தம், பஸ்களை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பஸ்கள் நிறுத்தம், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவறைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, சி.எம்.டி.ஏ. 5-வது மாடியின் மேற்குப் பகுதியில் ரூ.2.5 கோடியில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட திட்டப் பிரிவு அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இப்பிரிவு 100 அலுவலர்கள் பணிபுரியும் வகையில் நவீன அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சி.எம்.டி.ஏ. அனைத்து அலுவலக பகுதிகளையும் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.