< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு என்ன..?
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு என்ன..?

தினத்தந்தி
|
4 July 2023 12:06 PM IST

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளனர்.

ஐகோர்ட்டு நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்று அவர் கூறினார்.

ஐகோர்ட்டு நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு

ஆட்கொணர்வு மனுவில் நீதிபதி நிஷாபானு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது மேலும் 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம். அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3-வது நீதிபதியை நியமிக்குமாறு பரிந்துரை செய்து வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும், 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில்பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "இரு நீதிபதிகளில் நீதிபதி நிஷா பானு, எங்களின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்குவது இயல்புதான். 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்படும். வழக்கில் 3-வது நீதிபதி கூறும் தீர்ப்பை பொறுத்து இறுதி தீர்ப்பு அமையும். நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார். கைது செய்யப்பட்ட பின்னர் 15 நாட்கள் கழித்து போலீஸ் காவலில் எடுக்க முடியாது என்பதுதான் எங்களது ஆணித்தரமான வாதம்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்