< Back
மாநில செய்திகள்
புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் விழுந்த என்ஜினீயர் கதி என்ன? - 3 வது நாளாக தேடும் பணி தீவிரம்
மாநில செய்திகள்

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் விழுந்த என்ஜினீயர் கதி என்ன? - 3 வது நாளாக தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
5 Aug 2022 4:11 PM IST

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயரை தேடும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகின்றது.

திண்டுக்கல்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய்பாண்டியன் (வயது 28). இவர், டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயர் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர், திண்டுக்கல் மாவட்டம் மங்களம்கொம்பு பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார். கடந்த 31-ந்தேதியன்று ராமநாதபுரம் சத்திரத்தை சேர்ந்த அவருடைய நண்பர் கல்யாணசுந்தரம் (25), அஜய் பாண்டியனை பார்க்க மங்களம்கொம்புக்கு வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2-ம் தேதி ஆடி 18-ம் பெருக்கையொட்டி இவர்கள் 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். அங்கு அஜய் பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்று உற்சாகமாக 'போஸ்' கொடுத்தார்.

அதனை, கல்யாணசுந்தரம் செல்போனில் பல்வேறு விதங்களில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அஜய்பாண்டியன், நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி 'போஸ்' கொடுத்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், திடீரென பாறையில் கால் வழுக்கி அவர் நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்து விட்டார். கண்இமைக்கும் நேரத்தில், நீர்வீழ்ச்சியில் மூழ்கிய அவர் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறிவிழுந்த என்ஜினீயரை தேடும் பணியில் 3-வது நாளாக 25-க்கும் மேற்பட்ட மீட்புபடை வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் செய்திகள்