சிவகங்கை
அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?-சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் செயல்படுகிறது
|அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?-சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் செயல்படுகிறது
தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பசியை போக்கும் வகையில் குறைந்த விலையில் கடந்த 2015-ம் ஆண்டு அப்போதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.
அனைத்து தரப்பு மக்களும் தினந்தோறும் காலை மற்றும் மதியம் வேளையில் குறைந்த செலவில் உணவை சாப்பிட்டு வருகின்றனர். இந்தியாவில் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் செயல்பட்டு வந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளில் அம்மா உணவகம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை நகரில் தெப்பக்குளம் பகுதியிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும், காரைக்குடி நகரில் நீதிமன்றம் அருகேயும், தேவகோட்டை நகரில் பஸ் நிலையம் பகுதியில் என மொத்தம் 4 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது.
பசியை போக்கியது
இந்த உணவகங்கள் மூலம் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. காலையில் சாம்பாருடன் இட்லி ரூ.1-க்கு வழங்கப்பட்டு வருகிறது. மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வாரத்திற்கு ஒரு நாள் வெரைட்டி சாதமாக புளியோதரை மற்றும் தக்காளி சாதம் ரூ.5-க்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்பட்ட நிலையில் இந்த அம்மா உணவகம் மட்டுமே இயங்கியது. அப்போது ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய உணவகமாக திகழ்ந்தது. இங்கு சாப்பிட வருபவர்களுக்கு அங்கேயே தட்டு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுகிறது. இருப்பினும், அம்மா உணவவத்தில் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்
கொரோனா காலத்திலும் இயங்கியது
ஜெயராணி (அம்மா உணவக பணியாளர்):- நகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த உணவகத்திற்கு மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தடையின்றி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து உணவகங்களும் மூடப்பட்ட நிலையில் இந்த உணவகம் மட்டும் இயங்கியது. அப்போது நாள் ஒன்றுக்கு காலையில் 600 பேரும், மதியம் 1000 பேர் வரை சாப்பிட்டனர். தற்போது கொஞ்சம் குறைந்து நாள் தோறும் காலையில் 150 பேரும், மதியம் 300 பேரும் சாப்பிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் குறைவாக இருக்கும்.
இந்த உணவகத்தில் மொத்தம் 10 பெண்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் போதுமான சம்பளம் எங்களுக்கு கிடைக்கவில்லை. மிக குறைந்த சம்பளம் மட்டுமே வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.