சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன? - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
|வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் என்று தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையின் தற்போதைய நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 1,800 பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளன. 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 மின் நிலையங்களுக்கு மட்டும் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மின் நிலையங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைய குறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 4% பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை; இன்று மாலைக்குள் நிலைமை முழுவதுமாக சரிசெய்யப்படும். உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மெட்ரோ ரெயில்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. சென்னையில் 85% இடங்களில் செல்போன் சேவை சீரானது. நாளை மாலைக்குள் செல்போன் சேவை முழுமையாக சீராகும். குடிநீர் கேன்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டாம்; தட்டுப்பாடு வராது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும்.
சென்னை புறநகரில் தேங்கிய தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. மிக்ஜம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை விரைவில் பழைய நிலைக்கு திரும்பும். இவ்வாறு கூறினார்.