பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இறப்புக்கு காரணம் என்ன? - வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
|பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
சென்னை
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இதனிடையே வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி செய்தியாளர்களிடம், நேற்று காலை என்ன நடந்தது என்ற தகவலை தெரிவித்தார்.
அதில் "வாணி ஜெயராம் அவரது வீட்டில் தனியாகத் தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்வேன். வழக்கம்போல இன்றைக்கு காலை (நேற்று) 10.45 மணிக்கு நான் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தேன். கிட்டதட்ட 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. உடனே போன் செய்து பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. என் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன்.
அவரும் வாணி ஜெயராமிற்கு போன் செய்து பார்த்தபோதும் அழைப்பை எடுக்கவில்லை, கதவும் திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்து கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை சொன்னேன். பின்னர் அனைவரும் சேர்ந்து போலீசுக்கு தகவல் சொன்னோம்.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்த வண்ணமே இருந்தது. அவர் எந்த சிகிச்சையும் எடுத்து வரவில்லை. தற்போது நெற்றியில் காயம் இருக்கிறது" என மலர்கொடி தெரிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் மரணம் மர்மா மரணம் என ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவில் வாணி ஜெயராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணத்தினால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெற்றியிலும், மேசையில் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்று தடவியல் நிபுணர் சோதனையில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், அவரது வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் சென்றதற்கான அடையாளங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். மதியம் 2 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது