அ.தி.மு.க.வில் நடப்பவை கவலை அளிக்கிறது- சசிகலா
|அ.தி.மு.க.வில் நடப்பவை கவலை அளிக்கிறது என்று சசிகலா கூறினார்.
வெட்கம்-கவலை
சசிகலா, திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். மன்னார்சாமி கோவில் பகுதியில் அவர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருந்த அ.தி.மு.க.வின் இன்றைய நிகழ்வுகள் ஒவ்வொரு தொண்டனும் வெட்கமும், கவலையும் படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
தொண்டர்கள் தான் உயிர், கட்சி உடல் என்றும் தொண்டர்கள் இயங்கினால் தான் கட்சி இயங்கும் என்றும் தொண்டர்கள் அடங்கி விட்டால் கட்சி முடங்கி விடும் என்றும் எம்.ஜி.ஆர். கூறியதை மறக்காமல் கடைபிடித்தால்தான் அ.தி.மு.க. நிலைக்கும்.
பசுந்தோல் போர்த்திய புலி
பசுந்தொழுவத்தை காவல் செய்ய பசுந்தோல் போர்த்திய புலிகளிடம் ஒப்படைத்தது போன்று தன்னிகரில்லா பேரியக்கமாக விளங்கிய அ.தி.மு.க. இன்று உரிமைகளை இழந்து அராஜகத்தின் கைகளில் சிக்கி அல்லல்பட்டு கொண்டிருக்கிறது.
சிலரின் சுயநலத்தால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
உங்களது சுய விருப்பு வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?.
தி.மு.க.வினரின் எண்ணம்
அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க.வினர் பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து அவர்கள் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினரின் எண்ணம் ஒருபோது ஈடேறாது என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.