நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன? - தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை
|நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் ஒரு சிறுவனை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். அந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் அளித்தார். இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாங்குநேரி சம்பவத்தில் பள்ளி மாணவர்களிடையே பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சக மாணவனின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து மாணவனை அரிவாளால் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.