< Back
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது என்ன? கோவில் நிர்வாகம் விளக்கம்
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது என்ன? கோவில் நிர்வாகம் விளக்கம்

தினத்தந்தி
|
12 Dec 2023 1:05 PM IST

அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர்.

திருச்சி,

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீரங்கநாதர் கோவில். சுக்கிரன் தலமாகவும் போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழா இன்றைய தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக வரும் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கோவில் காவலாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் முந்திக்கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து காவலாளிகளுக்கும் கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முதலில் வாக்குவாதமாக தொடங்கிய சண்டை பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கியதில் பக்தர் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காவலாளி மீது நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் கூச்சலிட்டனர். அங்கு வந்த உதவி ஆணையர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவில் வளாகத்தில் பக்தர்கள் காவலாளி இடையே சண்டையிட்ட சம்பவம் கோவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பக்தர்கள் மீதான தாக்குதல் குறித்து ஸ்ரீரங்கம் கோவில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,

கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு உண்டியலை பிடித்து பக்தர்கள் ஆட்டிக்கொண்டிருந்தனர். கேள்வி கேட்ட கோவில் பணியாளரை தலை முடியை பிடித்து அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல் அந்த பக்தர்கள் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்