எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டி.டி.வி.தினகரன் பேட்டி
|எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
திருச்சி,
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக தனி நீதிபதி தொடர்ந்து விசாரிப்பார் என்றும் கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், இதுதொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலையை கொடுத்தால் அது இன்னும் பலவீனப்படும். ஆட்சி அதிகாரத்தால் கிடைத்த பண பலம், ஆட்சி அதிகாரத்தால் ஏற்பட்ட மமதை ஆகியவற்றை வைத்துக்கொண்டு தன்னை தலைவராக அறிவித்துள்ளார். இப்போது பொதுக்குழுவையும் வசப்படுத்தி தனக்கு சாதகமாக்கியுள்ளார். காலம் அவர்களுக்கு தீர்ப்பு சொல்லும்.
தற்காலிக வெற்றிதான்
வருங்காலத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். தற்போது இரட்டை இலை கிடைத்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா?. ஏற்கனவே இரட்டை இலையில் போட்டியிட்டு கூட அவர்களால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. இது அவர்களுக்கு கிடைத்த தற்காலிக வெற்றிதான். எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை.
அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே முக்கியமான நிர்வாகிகள், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் இங்கு வந்துவிட்டனர். அவர்களிடம் இருப்பது உண்மையான அ.தி.மு.க. அல்ல. பணபலத்தால் அந்த கட்சி நடந்து கொண்டு இருக்கிறது.
பழைய நண்பர்
ஓ.பன்னீர்செல்வம் என்னுடைய பழைய நண்பர். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார். இந்த தீர்ப்பை வைத்துக்கொண்டு என்னுடன் வாருங்கள் என்று அழைப்பது நாகரிகமாக இருக்காது. அவருக்கு இது தற்காலிக பின்னடைவுதான்.
2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அ.தி.மு.க.வை டெல்லி இயக்குகிறது என்பது உண்மைதான். ஆனால் இந்த தீர்ப்புக்கு பின்னணியில் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை.
கமல்ஹாசன்
கமல்ஹாசன் விஸ்வரூபம் பிரச்சினையின்போது, அன்று ஜெயலலிதாவுக்கு நன்றி கூறி விளம்பரமே கொடுத்தார். இன்று தி.மு.க.வை திருப்திப்படுத்த இவ்வாறு பேசுகிறார். நல்ல அரசியல்வாதியாக அவர் மாறிவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்க வேண்டும் என்பதால், ஏதேதோ பேசுகிறார். அவர் பேசுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.