காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை? - முழு விவரம்
|காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் செல்வப்பருத்தகை, பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார்.
இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்,
* காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.