< Back
மாநில செய்திகள்
வெளிச்சந்தையில் விலை அதிகம் உள்ள விளைபொருட்கள் என்னென்ன?
விருதுநகர்
மாநில செய்திகள்

வெளிச்சந்தையில் விலை அதிகம் உள்ள விளைபொருட்கள் என்னென்ன?

தினத்தந்தி
|
4 Oct 2023 1:24 AM IST

தேசிய அளவில் குறைந்தபட்ச ஆதார விலையைவிட வெளிச்சந்தையில் விலை கூடுதலாக இருக்கும் விளை பொருட்கள் பற்றி வணிக வட்டாரத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

நடப்பு காரிப் பருவ சாகுபடி முடிவடைந்துள்ள நிலையில் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் 158.06 மில்லியன் டன் விவசாய விளை பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.அரிசி 11 மில்லியன் டன், பருப்பு வகை 9.7 மில்லியன் டன், எண்ணெய் வித்துக்கள் 28.37 மில்லியன் டன், பருத்தி தலா 170 கிலோ கொண்ட 37 லட்சம் பேல் உள்ளிட்டவை கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

வெளிச்சந்தையில் பல விளை பொருட்களின் விலை மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோளம் குவிண்டால் ரூ.3,120-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிலையில் வெளிச்சந்தையில் ரூ.4,844-ஆக விற்பனை ஆகிறது. இது நிர்ணயித்த விலையைவிட 53 சதவீதம் கூடுதல் ஆகும்.

இதேபோன்று துவரை வெளிச்சந்தையில் குவிண்டால் ரூ.9399-ஆக விற்பனையாகும் நிலையில் மத்திய அரசு ரூ.7ஆயிரமாக ஆதார விலை நிர்ணயித்துள்ளது. அதாவது, வெளிச்சந்தையில் 34.3 சதவீதம் விலை அதிகமாகும்.நிலக்கடலை ரூ.6964-ஆக விற்பனையாகும் நிலையில், மத்திய அரசு ரூ.6377-ஆக விலை நிர்ணயித்துள்ளது. 9.32 சதவீதம் வெளிச்சந்தையில் விலை அதிகமாக உள்ளது.

உளுந்துக்கு மத்திய அரசு ரூ.6950 ஆக விலை நிர்ணயித்துள்ள நிலையில் வெளிச்சந்தையில் ரூ.7530-ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது 8.3 சதவீதம் விலை அதிகம் ஆகும்.

பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.6620-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிச்சந்தையில் விலை ரூ.6984-ஆக விற்பனை ஆகிறது. இது 8.6 சதவீதம் விலை அதிகம்.மக்காச்சோளத்தின் விலையை மத்திய அரசு ரூ.2690-ஆக நிர்ணயித்துள்ள நிலையில் வெளிச்சந்தையில் ரூ.2150 ஆக விற்பனை ஆகிறது. இது 0.29 சதவீதம் கூடுதல் ஆகும். பாசிப்பருப்பு மற்றும் கம்பு ஆகியவை மட்டுமே மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட வெளிச்சந்தையில் விலை குறைவாக உள்ளது. இத்துடன் குறிப்பிட்ட சில விளைபொருட்கள் சந்தைக்கு வருவது மிக குறைவாக இருப்பதுதான் காரணம் என மத்திய வேளாண் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேற்கண்ட தகவலை வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்