மதுரை
அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள்?குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது, குப்பைகள் தேங்கி கிடக்கிறது-மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
|மதுரை மாநகரில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை மாநகரில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
குடிநீர் கேன்
மதுரை மாநகரின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் விட்டு, ஒருநாள் குடிநீர் வினியோகம் என்று மாநகராட்சி சொன்னாலும் பல இடங்களில் 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. அதுவும் மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் வாரத்திற்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், வைகை ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது.
குறிப்பாக செல்லூர், தபால்தந்தி நகர், வில்லாபுரம், அனுப்பானடி, டி.வி.எஸ்.நகர், ஜெய்ஹிந்த்புரம், கோச்சடை, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை.அதே போல் பல இடங்களில் வரும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் காரணமாக மாநகர மக்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது.
மாநகரை பொறுத்தவரை மேம்படுத்தப்பட்ட பகுதிகளில் எல்லாம் மக்கள் மாநகராட்சி குடிநீரை குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டனர். எல்லாம் சிறிய தனியார் டேங்கர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அல்லது கேன் குடிநீரையே வாங்கி குடிக்கின்றனர். நடுத்தர-ஏழை மக்கள் தான் மாநகராட்சியின் குடிநீரை நம்பி உள்ளனர். ஆனால் தற்போது பல இடங்களில் கழிவுநீர் கலந்து வருவதால் அவர்களும் குடிநீர் குடிக்க முடியவில்லை.
குப்பை நகரம்
அதனால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். கவுன்சிலர்களிடம் புகார் அளித்தும் பலன் இல்லாமல் உள்ளது. ஏனென்றால் கவுன்சிலர்களின் புகார்களை அதிகாரிகள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. சில அதிகாரிகள், கவுன்சிலர்களின் போனை எடுப்பதே இல்லை. எனவே சில வார்டுகளில் கவுன்சிலர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பொதுவாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தான் போராட்டம் நடத்துவார்கள். ஆனால் இப்போது தி.மு.க.கவுன்சிலர்கள் கூட போராட்டம் நடத்த தொடங்கி விட்டனர். கடந்த வாரம் கூட 79-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் லத்திகாஸ்ரீ சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அதே போல் மாமன்ற கூட்டத்திலும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு மேலாக தி.மு.க. கவுன்சிலர்கள் மாநகராட்சி மீது குற்றம் சுமத்துகின்றனர்.
அதே போல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. என அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டு பிரச்சினைகளை பட்டியலிட்டு பேசுகின்றனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை. தி.மு.க. மண்டல தலைவர்களும் ஒவ்வொரு கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, கழிவுநீர், தெருவிளக்கு போன்ற பிரச்சினைகளை கூறுகின்றனர்.
மாமன்ற கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, பல வார்டுகளில் குடிநீர் 4 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. அதுவும் கழிவுநீர் கலந்து தான் வருகிறது. அதே போல் குப்பைகள் சரி வர அள்ளுவதில்லை. ஏன் என்று கேட்டால் வாகன பழுது என்கிறார்கள். துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் எங்கும் குப்பைகள் தேங்கி உள்ளது. கோவில் நகரம், இப்போது குப்பை நகரமாகி விட்டது. மாநகராட்சி அனைத்து பணிகளிலும் சுணக்கம் காட்டினால், மக்கள் பிரச்சினைகளை எப்போது தீர்ப்பது. குடிநீரில் கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பொது நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள் என்றார்.