< Back
மாநில செய்திகள்
வெஸ்ட் நைல் வைரஸ்; கேரளாவின் 13 எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாநில செய்திகள்

வெஸ்ட் நைல் வைரஸ்; கேரளாவின் 13 எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தினத்தந்தி
|
12 May 2024 9:16 AM GMT

வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து கேரள மாநில அரசு சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகுமாறும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொசுக்களால் பரவும் இத்தகைய நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு நமது வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, நமது வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். வெஸ்ட் நைல் வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் பொது சுகாதாரத்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்