சென்னை
விதிமுறைகளை மீறி மரங்கள் அகற்றப்பட்டதா? திரு.வி.க. பூங்காவில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு - குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புகாரால் பரபரப்பு
|சென்னை திரு.வி.க. பூங்காவில் விதிமுறைகளை மீறி மரங்கள் அகற்றப்பட்டதா? என்பது குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அடுக்கடுக்கான புகார்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை செனாய்நகரில் 8.8 ஏக்கர் பரப்பளவில் திரு.வி.க. பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பங்கு மரம், வேப்பமரம் என சுமார் 328 மரங்கள் இருந்தன.
கடந்த 2011-ம் ஆண்டு இந்த பூங்காவில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இந்த பூங்கா மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த பூங்காவில் உள்ள பழமையான மிகப்பெரிய மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டன. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில் இந்த பூங்காவிற்கு அருகில் வசிக்கும் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், நீதிபதி தண்டபாணிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'திரு.வி.க. பூங்காவில் தேவையில்லாமல் மிகப்பெரிய மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் இருந்த இடத்தில் கடைகள் கட்டப்பட்டு மெட்ரோ ரெயில் நிறுவனம் கடைகள் கட்டி வாடகைக்கு விட உள்ளது. தேவையில்லாமலேயே மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலும் அழிக்கப்பட்டுள்ளது' என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்தை படித்த நீதிபதி தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திரு.வி.க. பூங்காவை நானே நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். அதன் பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
அதன்படி, திரு.வி.க. பூங்காவுக்கு, நீதிபதி தண்டபாணி நேற்று ஆய்வுக்கு வந்தார். அவரை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். நீதிபதி வந்திருக்கும் தகவல் அறிந்து செனாய்நகர் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகளும் அங்கு வந்தனர். முதல்கட்டமாக பூங்கா முழுவதுமாக நீதிபதி தண்டபாணி சுற்றி வந்து ஆய்வு செய்தார்.
அப்போது, சில இடங்களை குறிப்பிட்டு, இங்கு நல்ல நாட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது, 'மேலைநாடுகளில் விளையாத நிலத்தையும் விளைச்சல் நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கிறார்கள்.
நாம் விளைச்சல் நிலத்தையும், கான்கிரீட் நிலங்களாக மாற்றி வருகிறோம்' என்று நீதிபதி தண்டபாணி சிரித்தபடி கூற, மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு அது 'குட்டு' வைத்தது போல அமைந்தது.
இந்த ஆய்வின்போதே, குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பல புகார்களை அடுக்கடுக்காக முன்வைத்தனர். அனைத்தையும் பொறுமையாக கேட்ட நீதிபதி தண்டபாணி நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். சில புகார்களுக்கு அவரே விளக்கமும் கொடுத்தார். இந்த ஆய்வின்போது, சில தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்தும் தனது கருத்தை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கினார். சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வு குறித்து செனாய்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சிவகுமார் கூறியதாவது:-
இந்த நிலத்தை சொன்னபடி மெட்ரோ ரெயில் நிறுவனம் பயன்படுத்தவில்லை. தேவையில்லாத சூழலிலும் மரங்களை வெட்டியிருக்கிறார்கள். முன்பு இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 50 அடியாக இருக்கும். இப்போது 200 அடியை தாண்டி சென்றுவிட்டது. பூங்காவை சுற்றிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. ஆங்காங்கே குழிகள் தோண்டி வைத்திருக்கிறார்கள். மரக்கன்று நடுவதற்கும் எந்த திட்டமும் முன்னெடுக்கவில்லை. எனவே இந்த பூங்காவை சுற்றிலும் நிறைய மரக்கன்றுகள் நடுவதற்கு நீதிபதி அறிவுரை வழங்கி சென்றிருக்கிறார். இதனை மெட்ரோ நிர்வாகம் பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.