தேனி
வட மாநிலத்திற்கு வேலைக்கு சென்றமலைக்கிராம சிறுவர்களை மீட்டு தர வேண்டும்:பெற்றோர் போலீசில் புகார்
|வட மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற மலைக்கிராம சிறுவர்களை மீட்டு தர வேண்டும்: பெற்றோர் போலீசில் புகார்
மத்திய பிரதேசத்தில் வேலை
ஆண்டிப்பட்டி அருகே ராஜக்காள்பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் சிலரின் பிள்ளைகள் குடும்ப வறுமையின் காரணமாக வெளியூர்களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 15 வயது சிறுவர்கள் 3 பேரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதிக்கு உணவகத்தில் வேலை செய்வதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 6 மாதங்களாக அங்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சிறுவர்கள் 3 பேரும் அவர்களது பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று தெரிகிறது.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர்கள் தங்களது பிள்ளைகள் வேலையை விட்டு சென்று 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் சிறுவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வட மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற தங்களது மகன்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு தர வேண்டும் என்று பெற்றோர் அவரது உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.