< Back
மாநில செய்திகள்
11 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற பைபர் படகு மீனவர்கள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

11 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற பைபர் படகு மீனவர்கள்

தினத்தந்தி
|
18 May 2023 12:15 AM IST

11 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற பைபர் படகு மீனவர்கள்

வேதாரண்யத்தில் 11 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழக கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி கிடையாது. இந்த நாட்கள் மீன்பிடி தடை காலமாக நடைமுறையில் உள்ளது.

மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தை படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பராமரிப்பதற்கு மீனவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

பைபர் படகு மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது.

அதன்படி வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் கடந்த 11 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மியான்மரில் புயல் கரையை கடந்த பின்னரும் வேதாரண்யம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து 3 நாட்கள் வேதாரண்யம் பகுதி கடல் உள்வாங்கி காணப்பட்டது.

11 நாட்களாக...

கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வேதாரண்யம் சன்னதி கடற்கரை முதல் ஆறுகாட்டுத்துறை வரையிலான பகுதியில் கடற்கரை சேறாக காணப்பட்டதால், மீனவர்கள் அவதிப்பட்டனர். வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடந்த 11 நாட்களாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் தணிந்து காணப்பட்டது. இதையடுத்து பைபர் படகு மீனவர்கள் 11 நாட்களுக்குப் பிறகு நேற்று உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மேலும் செய்திகள்