காஞ்சிபுரம்
வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்
|வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
ஜமாபந்தி
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஜமாபந்தி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. ஜமாபந்தி கூட்டத்தில் வாலாஜாபாத் தாலுகாவை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், நலத்திட்ட உதவிகளையும் கேட்டு மொத்தம் 1,054 மனுக்களை அளித்திருந்தனர்.
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 881 மனுக்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், ஆய்வு செய்து 173 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிறைவுநாள் விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்துகொண்டு 31 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 17 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 72 பேருக்கு பட்டா மாற்றம், 30 பயனாளிகளுக்கு ரேஷன்கார்டு, பழங்குடியின மக்களுக்கு மூலிகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் மற்றும் நர்சரி அமைக்க உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக 5 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள், 12 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க உதவித்தொகை என ரூ.30 லட்சத்து 45 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 173 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.