சேலம்
மக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
|சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.8 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.8 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 302 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் மாற்றுத்திறனாளிகளிடம் 10 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கைகளும் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் வாகா சங்கத் பல்வந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மயில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.