< Back
மாநில செய்திகள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்

தினத்தந்தி
|
17 Aug 2022 2:24 PM IST

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி. கணேசன் வழங்கினார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலை கவசம், முக கவசம், பாதுகாப்பு காலனி, வெல்டிங் முக கவசம், ஜாக்கெட், மின் பாதுகாப்பு காலணி, கையுறை, ரப்பர் காலனி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது அமைச்சர் சி.வி.கணேசன் கட்டுமான தொழிலாளர்கள் 11 ஆயிரத்து 637 பேருக்கு ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறோம். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 11 ஆயிரத்து 637 பேருக்கு ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிதி நெருக்கடியில் கூட தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றி தொழில் வளர்ச்சியில் 3-வது மாநிலமாக கொண்டு வந்துள்ளார்.

இவவாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கவுரி ஜெனிபர், அமலாக்க உதவி ஆணையர் சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்