செங்கல்பட்டு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
|செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ.பாபு ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 348 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதனை தொடர்ந்து, வருவாய் துறையின் சார்பாக மதுராந்தகம் வட்டம், வையாவூர் குறுவட்டம், நெ.34, வேடவாக்கம் மதுரா நெய்குப்பி கிராமத்தில் 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் 5 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பாக வேளாண் எந்திரமயமாக்கல் திட்டம் 2022-23 ன் கீழ் ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய பவர் டில்லர்கள், தென்னை மரக்கன்றுகள் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனங்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கடன், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் என 25 பயனாளிகளுக்கு ரூ.38.15 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மதுராந்தகம் வட்டம், கிணார் கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த ஸ்ரீநாத் என்பவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பாக செங்கல்பட்டு உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இயற்கை உரம் உற்பத்தி, நிலக்கடலை மற்றும் எள் கொள்முதல் செய்திட கூடுதல் கடன் பெறுவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிதி மானிய தொகையையும், நுண் தொழில் நிறுவன நிதிதிட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் தொடங்கிட 50 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர். அசோக், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையகூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். 80 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் சிரமங்களை போக்கும் வகையில் தொழிலாளர்கள் ஓய்வெடுக்க ஓய்வு அறைகளை நவீனப்படுத்தி குளிரூட்டப்பட்ட அறைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம் பணிமனையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.