சென்னை
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்புக்கு வரவேற்பு: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
|வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மேள-தாளம் முழங்க, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அப்போது, எம்.பி.ரஞ்சன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாச்சாத்தி வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய சென்னை ஐகோர்ட்டு நீதிபதிக்கு தலைவணங்கி பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். பழங்குடி இளம்பெண்கள் 18 பேர் அரசு அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த வழக்கில், அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது 215 பேர் மட்டுமே உயிருடன் உள்ள நிலையில், சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகள் 215 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகநீதி காவலராக செல்பட்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.
சோனியாகாந்தியின் 77-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு எஸ்.சி.துறை சார்பில் 'பீம் விவாக்' என்ற பெயரில் 77 ஜோடிகளுக்கு தலா ரூ.1½ லட்சம் சீர்வரிசையுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்க இருக்கிறோம். இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருமணங்களை நடத்தி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை மாநில துணைத் தலைவர்கள் நிலவன், வின்சென்ட், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாபாலன், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.