நாமக்கல்
பேளுக்குறிச்சியில் வாரச்சந்தை தொடங்கியது
|பேளுக்குறிச்சி வாரச்சந்தை நேற்று கூடியது. அங்கு விற்கப்படும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேந்தமங்கலம்
வாரச்சந்தை
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இருந்து மே மாதம் கடைசி வாரம்முடிய 3 மாதங்களுக்கு வார சந்தை சீசன் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டு சீசன் நேற்று தொடங்கியது. சேலம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேற்று அங்கு வந்து ஆர்வமாக சீசன் கடைகளை போட்டனர்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு மற்றும் சனிக்கிழமை மாலை வரை அந்த சந்தை நடத்தப்படுகிறது. இரவு நேரத்திலும் சந்தை நடப்பதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பெண்கள் வாடகை வாகனங்களில் அங்கு வந்து இரவில் தங்கி பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி செல்கின்றனர். இதனால் அந்த சந்தை மாநில அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
விலை உயர்வு
அந்த சந்தையில் கடந்த வருடம் ரூ.1,500 வரை விற்கப்பட்ட ஒரு செட் இந்த ஆண்டு ரூ.300 அதிகரித்து ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது. ஒரு செட் என்பது சீரகம், சோம்பு, மிளகு, கடுகு, வெந்தயம் ஆகியவை அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மளிகை பொருட்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீசன் நடைபெறும் வாரங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த சந்தை பகுதிக்கு வரும்போது குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவது பல ஆண்டுகளாக ஒரு குறையாக இருந்து வருகிறது. அவற்றை நீக்குவதற்கு ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.