< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களை கட்டிய சுற்றுலா தின விழா - தலையில் கரகம் வைத்து ஆடிப்பாடிய வெளிநாட்டு பெண்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களை கட்டிய சுற்றுலா தின விழா - தலையில் கரகம் வைத்து ஆடிப்பாடிய வெளிநாட்டு பெண்

தினத்தந்தி
|
28 Sept 2022 2:27 PM IST

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோவில் வளாகத்தில் உலக சுற்றுலா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு இவ்விழாவிற்கு வந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை விளக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமையில் நெற்றியில் திலகமிட்டு மலர் மாலைகள் அணிவித்து சுற்றுலாத்துறையினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பிறகு கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு வண்ண, வண்ண கலரில் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அப்போது விழாவிற்கு வந்த இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அங்கு நடந்த கரகம், காவடி ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து, உற்சாகமடைந்து அக்குழுவினருடன் இணைந்து தப்பாட்ட இசைக்கு ஏற்ப தன் தலையில் கரகம் வைத்து கிராமிய கலைக்குழுவினருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சிலரும் ஆர்வ மிகுதியில் கரகாட்ட குழுவினருடன் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்ததையும் காண முடிந்தது. பிறகு சுற்றுலா பயணிகள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள், பங்கேற்ற சுற்றுலா தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஐந்து ரதம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர், சுற்றுலா தினவிழாவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமல்லபுர இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முதல்வர் சரவணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பகவதி, மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பிரபல பரத நாட்டிய கலைஞர் மீனாட்சி ராகவன் தலைமையில் செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா பரத நாட்டிய பள்ளி குழுவினரின் தசவதாரம், சிவ தாண்டவம் நடனங்கள் நடந்தது. இதனை கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் ரசித்து பார்த்தனர்.

மேலும் செய்திகள்