< Back
மாநில செய்திகள்
களை கட்டிய மீன்பிடி திருவிழா
சிவகங்கை
மாநில செய்திகள்

களை கட்டிய மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
22 May 2022 8:43 PM GMT

திருப்பத்தூர் அருகே கருப்பூர் கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா களை கட்டியது. சுற்றுவட்டார கிராம மக்கள் உற்சாகத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கருப்பூர் கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா களை கட்டியது. சுற்றுவட்டார கிராம மக்கள் உற்சாகத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

மீன்பிடி திருவிழா

திருப்பத்தூர் அருகேயுள்ள கருப்பூர் ஊராட்சியில் உள்ள கருப்பூர் கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7.30 மணியளவில் ஊர் அம்பலக்காரர் கொடி அசைக்க கண்மாயைச் சுற்றியிருந்த கிராம மக்கள் ஊத்தா, மீன்பிடிக்கூடை மற்றும் மீன்பிடி வலைகளுடன் கண்மாய்க்குள் இறங்கினர்.

வற்றிய கண்மாய்க்குள் குறைந்த நீருக்குள் கிடந்த மீன்களை உற்சாகத்துடன் போட்டி போட்டு கொண்டு பிடிக்க தொடங்கினர். தங்கள் கைகளில் பெரிய, பெரிய மீன்கள் சிக்கியதை பார்த்ததும் உற்சாகத்துடன் உறவினர்களுக்கு காண்பித்து மகிழ்ந்தனர்.

கம, கமத்தது மீன்குழம்பு

இதில் விரால், கட்லா, கெளுத்தி, குரவை, ஜல்லிக்கெண்டை உள்ளிட்ட பலவகை மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். பிராமணப்பட்டி, குண்டேந்தல்பட்டி, மேலையான்பட்டி, சுண்ணாம்பிருப்பு, கருப்பூர், ஆலங்குடி, திருக்களாப்பட்டி, கோட்டையிருப்பு உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மீன்பிடி திருவிழாவில் மீன்கள் சிக்காதவர்களுக்கும் தாங்கள் பிடித்த மீன்களை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பிடிபட்ட மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று மீன்குழம்பு செய்து சாப்பிட்டனர். இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.

Related Tags :
மேலும் செய்திகள்