< Back
மாநில செய்திகள்
கள்ளந்திரி, திருவாதவூரில் களை கட்டிய மீன்பிடி திருவிழா
மதுரை
மாநில செய்திகள்

கள்ளந்திரி, திருவாதவூரில் களை கட்டிய மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
25 March 2023 8:12 PM GMT

கள்ளந்திரி, திருவாதவூரில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கள்ளந்திரி, திருவாதவூரில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

மீன்பிடி திருவிழா

அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனக்கால்வாய் வழியாக கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டது. அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன் குஞ்சுகள் கிராமத்தின் சார்பில் கண்மாயில் விடப்பட்டன.

கண்மாயில் தண்ணீர் வரத்து குறைந்ததையொட்டி மீன்பிடி திருவிழா நேற்று அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நேற்று அதிகாலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த கிராம மக்கள் கண்மாய் கரையை சுற்றிலும் அணிவகுத்து, வரிசையாக நின்றனர். சூரிய உதயம் தொடங்கிய வேலையில், கிராம பிரமுகர்கள் கண்மாய் கரையில் உள்ள ஐந்து கோவில் முத்தன சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு, வெள்ளைக்கொடி காட்டினர்.

மீன்களை பிடித்து உற்சாகம்

இதையடுத்து கரையில் நின்றிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் ஒன்றாக கண்மாய்க்குள் புகுந்தனர். இதனால் மீன்கள் துள்ளி குதித்து வெளியே தாவியோட முயற்சித்தது, இருந்தபோதிலும் முடியாமல் பொதுமக்கள் விரித்த வலையில் சிக்கியது, மேலும் வெறும் கைகளால் நிறைய பேர் மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்தக் கண்மாயிலிருந்து மீன்பிடித்த பொதுமக்கள் கூறுகையில், நாட்டுவகை மீன்களான சிலேபி, கட்லா, அயிரை உள்ளிட்ட பல வகையான மீன்கள் பிடிபட்டது என்று தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே சில வலைகளில் பாம்புகளும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமையல் செய்து சாப்பிட்டனர்.

திருவாதவூர்

மேலூர் அருகே திருவாதவூரில் திருமறைநாதர் கோவில் பக்கவாட்டில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே சுற்று வட்டார கிராமங்களில் தண்டோரா அறிவிப்பு போடப்பட்டது. மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடிப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமானோர் முதல் நாளன்று இரவில் திருவாதவூரில் வந்து குவிந்தனர். நேற்று கிராம பாரம்பரிய வழக்கப்படி பெரியவர்கள் சாமி கும்பிட்டு கண்மாய் கரையில் நின்று வெள்ளை துண்டுகளை ஆட்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கினர். அதுவரை பொறுமையுடன் காத்திருந்த பொதுமக்கள் கண்மாயின் நான்கு திசைகளிலும் இருந்து ஒரே நேரத்தில் கண்மாய் தண்ணீருக்குள் மீன்பிடிக்க ஓடினர். அப்போது தண்ணீருக்குள் இருந்து மீன்கள் வெளியே துள்ளி குதித்தன. பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த கச்சா வலைகள் மற்றும் பலவகையான வலைகளை பயன்படுத்தி மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர்.

இந்த ஆண்டு இந்த கண்மாயில் அதிகளவில் பெரிய மீன்கள் இருந்தன. விரால், கட்லா, சிலேபி, கெண்டை உள்ளிட்ட பலவகையான மீன்களை பொதுமக்கள் பிடித்துச்சென்றனர். இந்த மீன்களை விலைக்கு விற்றால் தெய்வகுற்றம் என்பது ஐதீகம். இதனால் பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை வீடுகளில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்