< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்

தினத்தந்தி
|
11 Jan 2023 12:21 AM IST

ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாகவும், உறவுகளை புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன.

அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.

திருமணங்களை மண்டபங்களில் நடத்தவேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு.

முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம்.

அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.

ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது. ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது.

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள்.

அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

சிக்கனம்

திருமண மண்டப உரிமையாளர் விருதுநகரை சசேர்ந்த சம்பத்குமார்:-

கடந்த காலங்களில் திருமணங்கள் வீடுகளில் நடந்து வந்த நிலையில் இடவசதி காரணமாகவும் மற்றும் திருமணத்திற்கு வருவோருக்கான வசதி காரணமாகவும் தற்போது பெரும்பாலான திருமணங்கள் மண்டபங்களில் நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு மண்டபங்களில் திருமணம் நடத்துவோர் திருமணத்திற்காக செலவு செய்வது அதிகமாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்பு மண்டபங்களில் திருமணம் நடத்தினாலும் செலவுகளை சுருக்கமாக செய்வதில் கவனமாக உள்ளனர்.

கொரோனாபாதிப்புக்கு பிறகு மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டதாகவே கருத வேண்டி உள்ளது. ஆதலால் வசதி படைத்தவர்களும், வசதி குறைந்தவர்களும் திருமண செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிக்கும் நிலை உள்ளது.

மேடை அலங்காரம்

மேடை அலங்கார நிறுவன உரிமையாளர் விருதுநகர் அலெக்சாண்டர்:-

திருமண மண்டபங்களில் மேடை அலங்காரத்திற்கென அதிக செலவு செய்யும் நிலை இருந்தது. குறைந்தபட்சம் ரூ. 2,500-ல் இருந்து அதிகபட்சம் ரூ. 4½ லட்சம் வரை மேடை அலங்காரம் செய்ய வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பு திருமணம் நடத்துவோர் மேடை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்தி அதற்கான செலவை செய்ய முன்வரும் நிலை இருந்தது.

கொரோனா காலத்தில் கூட ஓரளவு மேடை அலங்காரத்திற்கு செலவு செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது மேடை அலங்காரத்திற்கு செலவு செய்வது குறைந்து விட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும், திருமண முகூர்த்த நேரத்திலும் வெவ்வேறு மேடை அலங்காரங்கள் செய்து வந்த நிலையில் தற்போது அந்த அளவிற்கு யாரும் செலவு செய்வதற்கு தயாராக இல்லை. இதற்கு பணப்புழக்கம் குறைந்ததே காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அந்தஸ்தின் அடையாளம்

அருப்புக்கோட்டையை சேர்ந்த தம்பதி ரமேஷ், பாக்கியலட்சுமி:-

நமது பண்பாடு, உறவுகளின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் திருமணம் என்ற சொல் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். அப்படிப்பட்ட திருமணத்திற்காக இன்று பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. ஆடம்பர திருமணம் என்பது இன்று சமூக அந்தஸ்தின் அடையாளம் என நினைத்து செலவு செய்கின்றனர். அழைப்பிதழ், மண்டபம், மேடை அலங்காரம், போட்டோ, சாப்பாடு, நகை, உடை, தாம்பூல பை வரை ஆடம்பர திருமணங்களால் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர்.

ஆடம்பர திருமணத்திற்கு செய்யும் செலவுகளை குறைத்து கொண்டு அந்த பணத்தை நம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக சேமித்தால் நன்றாக இருக்கும்.

அதிக செலவு

சிவகாசி கோகுல்நாத்:- காலத்தின் ஓட்டத்தில் திருமண விழாக்கள் மிகவும் சுருங்கி விட்டது. முன்பு திருமணத்துக்கு மணமகன், மணமகள் குடும்பத்தில் பார்த்து நிச்சயம் செய்தனர். தற்போது அப்படி ஒரு நிலை இல்லை. நமக்கு தேவையான துணையை நாம் சரியான முறையில் தேர்வு செய்து கொள்ள அதிகவாய்ப்பு இருக்கிறது. ஈவன்ட்மேனேஜ் மென்ட் என்ற முறை கடந்த 5 ஆண்டுகளாக பிரபலம் அடைந்து வருகிறது. திருமணத்தின் போது வாசலில் நின்று பன்னீர் தெளிப்பது முதல் சாப்பிட்டு வெளியே வரும் வரை நம்மை இந்த அமைப்பினர் கவனித்துக்கொள்கிறார்கள். இதில் யார் உறவினர்கள் என்று அவர்களுக்கு தெரியாது. அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு தான் இருக்கும்.

முன்பெல்லாம் 30 வயது வரை இளைஞர்கள் திருமணம் செய்யாமல் காத்திருந்தனர். தற்போது அது 35 வயதாக உயர்ந்து இருக்கிறது. மொத்தத்தில் திருமணத்துக்கான செலவு அதிகரித்து உள்ளது.

வகை, வகையான உணவு

ராஜபாளையத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி கண்ணன்:-

முன்ெபல்லாம் திருமணம் மிகவும் எளிமையான முறையில் உறவுக்காரர்கள் அனைவரையும் வரவழைத்து நடக்கும். ஆனால் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப ஆடம்பரமாக திருமணத்தை நடத்துகின்றனர். லட்சக்கணக்கில், ஒரு சிலர் கோடிக்கணக்கில் செலவு செய்து சுபகாரியங்களை செய்கின்றனர்.

எந்த அளவுக்கு ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்கிறார்களோ அதே அளவிற்கு உணவும் வகை, வகையாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் உணவு விஷயத்தில் மட்டும் அவர்கள் விைலயை குறைக்கின்றனர். எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது விலையை குறைத்தால் நாங்கள் எப்படி தொழில் நடத்துவது என்று தெரியவில்ைல.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்களின் கருத்து

மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்