< Back
மாநில செய்திகள்
ஓசூர் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூர் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
10 Jun 2023 1:00 AM IST

ஓசூர்:

ஓசூர் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு

ஓசூர் அருகே பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், ஆட்களை பணிக்கு அமர்த்தும் கன்சல்டன்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் 3 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் மற்றும் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களின் 4 மோட்டார் சைக்கிள்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீவைத்து விட்டு சென்றனர். இதனால் மோட்டார் சைக்கிள்கள் மளமளவென எரிய தொடங்கின. நள்ளிரவு நேரம் என்பதால், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மோட்டார் சைக்கிள்கள் எரிந்ததால் வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல்களிலும் தீ பரவி, ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறின.

வலைவீச்சு

இந்த சத்தம் கேட்டு ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே வராத அளவிற்கு, தீ எரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் தீயணைப்புத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இருப்பினும் 4 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து உருக்குலைந்து போனது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்