சிவகங்கை
காரைக்குடி பகுதியில் நலிவடைந்து வரும் நெசவு தொழில் மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தல்
|நலிவடைந்து வரும் நெசவுதொழிலை காப்பாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி
நலிவடைந்து வரும் நெசவுதொழிலை காப்பாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நலிவடையும் நெசவுதொழில்
தமிழகத்தில் நெசவு தொழில் சேலம், கோவை, ஈரோடு, கரூர் ஆகிய நகரங்களில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பெருந்துறை, தாராபுரம், பாவனி மற்றும் செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி நகரில் நெசவுதொழில் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கானாடுகாத்தான், கோவிலூர் ஆகிய பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தறி கொண்டு நெசவு தொழிலை செய்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நலிவு காரணமாக மாற்று தொழிலுக்கு ஏராளமான நெசவாளர்கள் திரும்பியதால் தற்போது சொற்ப எண்ணிக்கையிலேயே நெசவாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கடந்த 150 ஆண்டுகால தொழிலை நினைவு கூரும் வகையில் பழமை மாறாமல் அதே தரத்துடன் செட்டிநாட்டு கைத்தறி ரகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் தவிர பெங்களூரு, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் இந்த ரக புடவைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேலைகள்
மேலும் இங்கு பராம்பரியமிக்க கோர்வை சேலைகள், கூரை நாட்டு புடவைகள், புட்டா, செட்டிநாடு காட்டன் சேலைகள், கண்டாங்கி சேலைகள் உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தரமான முறையில் இந்த சேலைகள் தயார் செய்யப்படுவதால் சினிமா பிரபலங்கள் முதல் சீரியல் பிரபலங்கள் வரை இங்கு நேரடியாக வந்து சேலைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு எடை குறைவாக 350 கிராமில் சில்க் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்வதால் இதை ஏராளமான இளம்பெண்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை அதிகளவில் இந்த புடவைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு இந்த தொழில் ஊக்குவித்தாலும் மறுபுறம் போதிய நூல் பற்றாக்குறை, சாயம், இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்டவைகளால் இந்த தொழில் நலிவை சந்திக்கும் நிலை உள்ளது. இதையடுத்து இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இந்த தொழிலுக்கு போதிய மானியம் வழங்க வேண்டும்.
ஊக்குவிக்க வேண்டும்
இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அணியும் சீருடைகளை கைத்தறி கொண்டு அணியும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மொத்த ஆர்டராக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நெசவாளர்கள் தரப்பில் வைத்துள்ளனர். இதுகுறித்து கானாடுகாத்தான் பகுதியில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர் வெங்கட்ராமன் கூறியதாவது:-
தமிழகத்தில் நெசவுதொழில் என்பது அரிதான தொழிலாக உள்ளது. நெசவாளர் ஒருவர் தனது கை, கால்களை 10 ஆயிரம் முறை இயக்கினால் மட்டுமே ஒரு சேலையை உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர அரசு பள்ளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் அணியும் சீருடைகளை நெசவாளர்களுக்கு மொத்த ஆர்டராக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களும் கட்டாயமாக கைத்தறி ஆடை அணிய வேண்டும் என்ற உத்தரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டால் தான் நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.