< Back
மாநில செய்திகள்
முக கவசம் அணிந்தால்... வசமாகும் உயிர் பாதுகாப்பு
கரூர்
மாநில செய்திகள்

முக கவசம் அணிந்தால்... வசமாகும் உயிர் பாதுகாப்பு

தினத்தந்தி
|
21 Oct 2022 11:51 PM IST

முக கவசம் அணிந்தால்... வசமாகும் உயிர் பாதுகாப்பு! என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கொரோனா வைரசால் இதுவரை 63 கோடியே 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முககவசம்

கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊடுருவிய போது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தனர். சிலர் ஒரே நேரத்தில் 2 முககவசங்களை பயன்படுத்தினர். முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த தொற்று உயிர் பலி அதிகம் வாங்கிய நேரத்தில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்திருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால் மக்கள் மத்தியில் அச்சமும் விலகி விட்டது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில் எச்-1 என்-1 இன்புளூயன்சா வைரசும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாக முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர். தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்கள் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.

பாதுகாப்பாக இருக்கும்

கரூரை சேர்ந்த பொதுமருத்துவரும், சர்க்கரை நோய் நிபுணருமான நிரேஷ் கண்ணன்:-

முக கவசம் அணிவது நல்லதுதான். பனி காலங்களில் ஏற்படும் நோய்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தடுக்கும். சாலைகளில் செல்லும் போது வாகனங்களில் இருந்து வரும் புகையினால் தொற்றுநோய்கள் ஏற்படாது. மற்றவர்களிடமிருந்து நோய்கள் நமக்கு பரவாது. நம்மிடம் இருந்தும் மற்றவர்களுக்கு நோய்கள் பரவாது. பொதுவாக முக கவசம் அணிவது தவறு இல்லை. கொரோனா இல்லாத காலங்களிலும் முக கவசம் அணிந்து கொள்ளலாம். மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களுக்கு முககவசம் பாதுகாப்பாக இருக்கும். தற்போது மழைக்காலங்களில் முக கவசம் அணிவது நல்லது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள், பழைய இரும்பு கடை, டெக்ஸ்டைல்ஸ், கோழி பண்ணை, கொசுவலை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து இருந்தால், அங்கிருந்து வெளிவரும் தூசிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். இதனால் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது.

விற்பனை குைறவு

தாந்தோணிமலையில் உள்ள ஒரு மெடிக்கல் உரிமையாளர் இந்திராணி:-

கொரோனா காலக்கட்டத்தில் முதல் அலையின் போது முக கவசம் டிமாண்டாக இருந்தது. இதனால் முககவசத்தின் விலை அதிகமாக இருந்தது. 2-வது அலையின் போது சுலபமாக கிடைத்தது. அரசும் முக கவசத்திற்கான விலையை நிர்ணயம் செய்தனர். அந்த விலையில்தான் முக கவசம் விற்பனை செய்யப்பட்டது. அப்போது தினமும் அதிகளவிலான முக கவசங்கள் விற்பனையாகின. பண்டல், பண்டலாக விற்பனையானது.

2-வது அலையின் போது 2 முககவசங்களை பொதுமக்கள் பயன்படுத்தினர். மேலும் என் 95 முக கவசம் டிமாண்டாக இருந்தது. தற்போது முககவசம் அணிவது குறைந்துவிட்டது. முக கவசத்தின் விற்பனையும் குறைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் பயன் குறைந்து, தைரியம் அதிகரித்தது. தற்போது முக கவசத்தின் விற்பனை மிக மிக குறைந்து உள்ளது. அத்திபூத்தாற்போல் ஒருசிலர் மட்டுமே வாங்கி பயன்படுத்துகின்றனர்.

தேவையான இடங்களில் அணியலாம்

நச்சலூர் அருகே உள்ள மேல நங்கவரத்தை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் நாகராஜன்:- கொரோனா காலத்தில் உயிர்காக்க முககவசம் அணிந்தோம். தற்போது அரசாங்கத்தின் அணுகு முறையால் கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் நான் முக கவசம் அணியவில்லை. எப்போதும் முக கவசம் அணிவது நல்லது.

குளித்தலையை சேர்ந்த சசிகுமார்:- முக கவசம் அணிவது பாதுகாப்பான ஒன்றாகும். காற்றில் உள்ள மாசு மற்றும் மற்றவர்களிடமிருந்து நோய் பரவாமல் தடுக்கிறது. இருப்பினும் முக கவசம் தொடர்ந்து அணிவதால் ஆக்சிஜனை நாம் சரிவர சுவாசிக்க முடியாது. அதன் காரணமாக மூச்சு தொடர்பான நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. தேவையான இடங்களில் மட்டும் முக கவசம் அணியலாமே தவிர நாள்தோறும் அணிவது என்பது சாத்தியகூறு அல்ல.

ஆரோக்கியத்தைப் பேண ேவண்டும்

வெள்ளியணை அருகே உள்ள கத்தாளபட்டியை சேர்ந்த வேலுச்சாமி:-

இன்றைய காலகட்டத்தில் வெளியில் செல்லும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்வது நல்லது. கொரோனா தாக்கம் அதிகம் இருந்த காலகட்டத்தில் அரசு அறிவுறுத்தலின் பேரில் முக கவசம் அணிய தொடங்கிய நான் இன்று வரை முக கவசம் அணிந்துதான் வெளியில் செல்கிறேன்.

இதற்கு காரணம் வாய் வழியாக பேசும்போது கிருமி தொற்றுகள் பரவும் என்பது மட்டுமல்லாமல், இன்றைய காலகட்டத்தில் சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் தூசு மாசுக்கள் நம் சுவாசத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்துள்ளதால் தான். எனவே நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் முக கவசம் அணிவது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்