< Back
மாநில செய்திகள்
சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு - ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு - ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

தினத்தந்தி
|
4 Aug 2022 9:52 PM IST

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமானவரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு அந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.

சென்னை,

கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி சசிகலாவுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டது.

ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறையில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பு உள்ள வழக்குகளை கைவிடுவது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கைகளை கைவிடுவதாகவும், அந்த வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதனையடுத்து சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்