சென்னை
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம் - முத்தரசன் அறிவிப்பு
|ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி, வீரபாண்டியன், கவுன்சிலர் ரேணுகா உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
44 பேர்களின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தமிழக கவர்னரை திருப்பி அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தூதுவராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய கவர்னர், சூதாட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலையை தூண்டும் விதமாக செயல்படுகிறார். உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.